திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனி சிகிச்சை பிரிவுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லாததால் அவர்களை சிகிச்சை பிரிவுகளில் உள்ள நடைபாதையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள செசிலியாள் நடுநிலைப்பள்ளிக்கு, பழைய கோட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அரசு செவிலியர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று முதல் பழைய கோர்ட்டு கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியது. மேலும் 200 படுக்கை வசதிகள் அந்த கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.