தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் தொண்டர்கள் முழு கவனத்துடன், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரை அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும் என டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். எந்த சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கு மாறலாம். அதனால் சிறிய கவனக் குறைவு அல்லது மன சோர்வு, சுணக்கம் ஏற்பட்டால் கூட அது நமது வெற்றியை சேதப்படுத்தி விடும் என அவர் கூறியுள்ளார்.