பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் பிரேசில் நாட்டில் தெருக்களில் குழி தோண்டி சடலங்களை புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3001 கடந்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் மயானங்களில் சடலங்களை புதைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவை அடுத்து மரண எண்ணிக்கையில் அதிகம் கொண்ட நாடாக தற்போது பிரேசில் தான் உள்ளது. அந்நாட்டில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களும் நிரம்பியுள்ள நிலையில் சடலங்களை புதைப்பதற்கு வேறுவழியில்லாமல் தெருக்களிலே குழி தோண்டி புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கனரக இயந்திரங்களின் உதவியுடன் குழிதோண்டி சடலங்களை மொத்தமாக நல்லடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்லறை தோட்டம் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மொத்த மக்கள் தொகையில் 13% மக்களுக்கு மட்டுமே இதுவரை முதல் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 12.7 மில்லியன் மக்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள 27 மாகாணங்களில் 14 நகரங்கள் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.