நண்பர்களுடன் சவால் விட்டு டர்பன்டைன் ஆயிலை குடித்த வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பால்ராம் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென டர்பன்டைன் ஆயிலை எடுத்து யாரால் இதை குடிக்க முடியும் என்று பால்ராம் சவால் விட்டுள்ளார்.
இதனை அடுத்து நண்பர்கள் யாரும் அதனைக் குடிக்கும் முன்வராததால் பால் ராம் தானே அதனை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அதன்பின் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.