விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த பகுதிகளில் காட்டெருமைகள், வரையாடுகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் ஆபத்தை உணராமல் விறகு சேகரிக்க செல்கின்றனர். இதனால் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் விறகு சேகரிக்க செல்பவர்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.