மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்தி சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலி வேலை செய்யும் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பரத் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 23ஆம் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அம்மாபேட்டை காவல் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரையும் பெண்ணையும் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் காணாமல் போன மாணவி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரத் என்பவர் கடத்திச் சென்று குஞ்சாண்டியூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு மாணவியுடன் அவர் வசித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்து மாணவியை மீட்டு பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.