‘வலிமை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய தகவலுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் வலிமை படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கமளித்த தயாரிப்பாளர் போனி கபூர் ‘பொருளாதார சிக்கல் தான். ஆனால் நடிகர் அஜித்தின் படம் ஓடிடிக்கு சரி வருமா ?. நடிகர் அஜித்தின் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் போது தான் அதற்கான வரவேற்பும், ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும். அதனால் தியேட்டர் ரிலீஸ் மட்டுமே இப்போதைக்கு மனதில் இருக்கிறது’ என கூறியுள்ளார்.