மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களது கார் வீரியம் பட்டி கூட்ரோடு தனியார் பள்ளி எதிரே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பெங்களூருவைச் சேர்ந்த நந்து மற்றும் அவருடைய நண்பர் சசி ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவரது கார் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும், காரும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜும், அவரது மனைவி சித்ராவும் காரிலிருந்து கீழே குதித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.