செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடந்த 27ஆம் தேதி தஞ்சையில் இருந்து வீரசிங்கம்பேட்டை மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்து கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து அவரது செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அம்மாபேட்டை பகுதியில் நான்கு பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் சந்தோஷ், மணிமாறன், சூர்யா, பாலமுருகன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 13 செல்போன்களையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்