வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் நிலவும் கடும் வரட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக சிறுமுகையில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலை மூடி கிடப்பதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து புதர் மண்டி காடு போல காட்சியளிக்கிறது.
இந்நிலையில் 4 காட்டு யானைகள் அதிகாலை வேளையில் விஸ்கோஸ் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறி சிறுமுகை சத்தி மெயின் ரோட்டை கடந்து சென்று அங்கு இருக்கும் தொழிற்சாலை குடியிருப்புக்குள் நுழைந்து விட்டது. இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.