இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், 14 நாட்கள் பொது முடக்கத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை மறுநாள், அதாவது மே 5-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. இது 19ஆம் தேதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும். வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு அடைப்பு இருப்போம். அந்த நாட்களில் பொதுப்போக்குவரத்து இயங்காது.
பொதுமக்கள் அருகில் உள்ள பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை சென்று வாங்கிக் கொள்ளலாம். திருமண விழாக்களை உள்ளூர் அதிகாரிகள் அனுமதியுடன் 50 பேருக்கு மிகாமல் இருந்து நடத்திக் கொள்ளலாம். இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதி. அனைத்து திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பொது போக்குவரத்து பூங்காக்கள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.