தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க இருக்கின்றது. தேர்தல் முடிவு வெளியாகி வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி கலைஞர் சமாதியில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்….
பதவி ஏற்பு விழா எப்பொழுது என்று கேட்டபோது…. இன்னும் முழுமையாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி சான்றிதழை கூட பெற முடியாத நிலையில், இன்னும் சில தொகுதிகள் இருக்கிறது. அதனால் இன்று ( நேற்று ) இரவு அல்லது நாளை (இன்று) காலையில்தான் இவைகளை எல்லாம் முடிவடைய உள்ள நிலையில் இருப்பதாக நான் அறிகிறேன். அப்படி தான் எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. எனவே அவைகளை எல்லாம் பெற்றபிறகு நாளைய தினம் (இன்று)நாங்கள் முடிவு செய்து நாளை மறுநாள் ( நாளை ) தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் முறையாக தலைவரை தேர்ந்தெடுத்து, அதற்குப் பிறகு அரசு அதிகாரிகளோடு கலந்துபேசி, எப்பொழுது பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வது என்பதை முடிவு செய்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.
அதுமட்டுமில்லை இப்பொழுது கொரோனா காலம் கொரோனா வின் கொடுமை எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தாமல் எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ, குறிப்பாக ஆளுநர் மாளிகையில் நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.