இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல்வேறு முக்கியமான தேர்வுகள் கூட ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா காரணமாக 4 மாதங்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் கொரோனா லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடுவதால் நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.