தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். இதனையடுத்தே தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள உள்ளார். அதில் முதன்மையானது கொரோனா பெருந்தொற்று. இது குறித்து அரசு அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து கொரொனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்ஸிஜன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருடன் ஆலோசனையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு, சிகிச்சைகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.