ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களை , தனி விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரும் திட்டமில்லை ,என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14வது ஐபிஎல் தொடரானது , கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தினசரி பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மே 15ஆம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. அதோடு இந்த தடையை மீறினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் , ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிறப்பு விமானம் மூலம் , தங்களை நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லி , சிறப்பு விமானங்கள் மூலம் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள ,ஆஸ்திரேலிய வீரர்களை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.