மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் படி போலீசார் தீவிரமாக பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் ஒரு வனப்பகுதியில் நீரோடை அருகே இளம்பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் பெற்றோர்களை வரவழைத்தனர். ஆடைகளின்றி கிடந்த அந்த சடலம் தனது மகளுடையது தான் (நோரா) என அவரது பெற்றோர் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். வனப்பகுதிக்கு சிறுமி எப்படி சென்றார். அங்கு மர்மமான முறையில் எப்படி உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சிறுமி இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.