இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லாமல் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக் குறைகள் மற்றும் படுக்கைகள் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமன்றி பல நாடுகளும் இந்தியாவில் தற்காலிகமாக ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.