பாறை மீது படகு மோதிய விபத்தில் அதில் பயணித்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்து தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் ஆள் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அந்த வகையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று படகில் அகதிகளை ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்துள்ளது. இந்த படகு சாண்டியாகோ நகரில் கடலில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பாறையில் மோதி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
இதில் பயணித்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 23 பேரை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் போலீசார் ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக படகின் கேப்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.