சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தியிலும் ஆண்டுக்கு ஆறு நாட்களுக்கு 16 வகையான பொருட்களை கொண்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த அபிஷேகத்தில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜரை பிரார்த்தனை செய்வார்கள்.
இந்நிலையில் இந்த கோவிலின் சித்திரை திருவோணத்தையொட்டி ராஜ்குமார், பழனியப்பன் மற்றும் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் இந்த அபிஷேக பூஜையில் தலைமை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து ஓதுவார்கள் பெரியசாமி ,நடராஜன் ஆகியோர் தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணம், பதிகங்களைப் பாடினார். அதன்பிறகு நடராஜருக்கும், சிவகாமி சுந்தரி அம்மாளுக்கும் திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழரசம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் இந்தக் கோவிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே நின்று முக கவசம் அணிந்து கொண்டு நடராஜரை வழிபாடு செய்தனர்.