நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் டேவிட் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் லட்சுமணன் என்பவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டேவிட் மது குடித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது டேவிட் தனது வீட்டில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து தனது நண்பர்கள் இருவரையும் தாக்கியபோது கோபம் அடைந்த அவர்கள் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து டேவிட்டை பலமாக தாக்கியுள்ளனர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழனிச்சாமி மற்றும் லட்சுமணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.