லாஸ் வேகாஸில் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் கட்ட குழிதோண்டியபோது சுமார் 6000 முதல் 14000 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாநிலத்திலிருந்து மாட் பெர்கின்ஸ் என்ற பெண் அவரின் கணவருடன் நெவாடாவில் புதிதாக கட்டிய வீட்டில், குடியேறியுள்ளார். அப்போது வீட்டின் பின்பகுதியில் நீச்சல் குளம் கட்டுவதற்கு, கட்டுமான பணியாளர்களை வரவழைத்து குழி தோண்டியபோது, 5 அடியில் சில எலும்புக்கூடுகள் கிடந்துள்ளது.
இதனால் அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், அவை மனிதனின் எலும்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நெவாடா அறிவியல் மைய ஆராய்ச்சி இயக்குனரான ஜோஷுவா போண்டே தெரிவித்துள்ளதாவது, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் சுமார் 6000-14000 வருடங்கள் பழமை வாய்ந்தவை.
இந்த எலும்புகள், குதிரை போன்ற பெரிய பாலூட்டிகளுடையவையாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் துலே ஸ்பிரிங்ஸ் புதைபடிவ படுக்கை தேசிய நினைவுச்சின்னத்தின் அருகில் இவை கிடைத்திருக்கிறது, என்றும் அந்த பகுதியில் இதற்கு முன்பே மாமத் போன்ற அரிய புதைபடிவங்கள் கிடைத்திருக்கிறது. எனவே அந்தபகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் இதே போல் எலும்பு அல்லது வேறு ஏதும் கிடைத்தால், பயப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.