இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இறைச்சி, துணி, மளிகை, காய்கறி போன்ற கடைகளை பகல் 12 மணிக்கு மேல் திறக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் தங்களது தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக தென்காசியில் உள்ள ரத வீதிகள், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கீழ ஆவணி வீதி போன்று பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று குவிந்தனர்.
மேலும் ஜவுளி கடைகளிலும் துணி எடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலை போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்பை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.