முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் கொடை விழாவை இரு தரப்பினரும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரனும் அவருடைய உறவினர்கள் மற்றும் வேறு ஒரு தரப்பினரும் இணைந்து கோவிலுக்குள் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து இரு தரப்பில் உள்ளவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் கம்பை எடுத்து தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 10 பேருக்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ராஜேந்திரன் அவருடைய மகனான கனகராஜ், முருகன், மாரி, பரமசிவன், முருகன், பத்ரகாளி ஆகிய ஏழு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.