தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து ஜெயங்கொண்டான் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் மட்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் ஆகியவைகள் செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி அன்று வங்கி மேலாளர் ஒருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை நகராட்சி நிர்வாகத்தினர் 14 நாட்கள் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் உள்ளே இருந்து வெளியேயும், வெளியே இருந்து உள்ளேயும், செல்லாதபடி தடுப்புக் கட்டைகளை வைத்து அடைத்து இருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் .மையங்கள் ஆகியவற்றிலும் கிருமிநாசினிகளை தெளித்தும் வந்தனர். மேலும் இப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக எந்த கடைகளையும் திறக்க கூடாது என்று அதிகாரிகள் உத்தரவுயிட்டுள்ளனர் . இதனையடுத்து தடை செய்யப்பட்ட பகுதியில் யாரேனும் அத்துமீறி நுழைந்திருக்கிறார்களா அல்லது யாரேனும் கடைகளை திறந்து வைத்து உள்ளார்களா என்று நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து வசூலித்து உள்ளனர். மேலும் இது போன்ற கட்டுப்பாடுகளை மீறி கடைகளை நடத்தினால் சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் சுபாஷினி எச்சரித்துள்ளனர்.