திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணிற்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி வனிதா(32). இவர்கள் இருவரும் திமுக கட்சியின் தொண்டர்கள் ஆவர். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என வனிதா முத்தாரம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளார். இதனையடுத்து தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் வனிதா கோவிலின் முன்பு நின்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் வனிதாவை திமுகவின் முன்னாள் எம்பி விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த பெண்ணிற்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கவேலன், செயலாளர் சேது கருணாநிதி, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன் மற்றும் மள்ளர் இயக்கிய கழக மாநில செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.