2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை வென்றார்.
2019ஆம் ஆண்டு தோகாவில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் , இந்திய அணி சார்பில் தமிழக வீராங்கனையான கோமதி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் . ஆனால் இவருடைய உடல் நலப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட, சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட , ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிந்தது . இதுதொடர்பாக உலக தடகள சம்மேளன கமிட்டி விசாரணை நடத்தியதில் , கடந்த ஆண்டில் மே மாதம் கோமதியின் பதக்கத்தை பறிக்க உத்தரவிட்டது.
அதோடு அவருக்கு 4 ஆண்டுகள் தடையும் விதித்திருந்தது. இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து , சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் கோமதி அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் , கோமதி அளித்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு , அவருக்கு 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. எனவே 32 வயதுடைய கோமதி , 2023 ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி வரை , நடைபெறும் எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.