திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு தாசில்தார் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான கடைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
அந்த புகாரின் பேரில் உதவி கலெக்டர் வந்தனாகார்க் தலைமையில், தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி போக்குவரத்து சாலை மற்றும் ஆலங்குளம் போக்குவரத்து சாலை பகுதியில் செயல்பட்டுவந்த பாத்திர கடை, துணிக்கடை, பர்னிச்சர் கடை என 10க்கும் மேற்பட்ட கடைகள் சமூக இடைவெளி இன்றி விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய வாடிக்கையாளரின் கூட்டத்தினை வெளியேற்றி விதிகளை மீறிய அனைத்து கடைகளுக்கும் தாசில்தார் சிவப்பிரகாசம் சீல் வைத்துள்ளார்.