மொபட்டில் லாரி மோதிய விபத்தில் இஸ்ரோவில் பணிபுரிந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருந்ததியர் தெருவில் சம்பத் மற்றும் அவரது மனைவி முத்துமாரி வசித்து வந்துள்ளார். இதில் சம்பத் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக நாகர்கோவிலில் வேலைபார்த்து வருகிறார் மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருக்கும் இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரி நாகர்கோவிலில் இருந்து மொபட்டில் வெள்ளமடம் வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரியும் தாளக்குடி கீழத் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரும் அவருடன் மொபட்டில் பயணித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, லாரி ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதனால் மொபட்டில் வந்த இருவரும் கீழே விழுந்ததில், முத்துமாரி தலை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ராஜேஸ்வரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துமாரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிதறாலை சேர்ந்த ஜெபராஜ் என்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.