தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை 37 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை, நாகர்கோவில், பெங்களூரு, திருவனந்தபுரம், ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.