பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக குளத்திற்குள் இறங்கி குபேந்திரனை மீட்டுக் கரைக்கு கொண்டு வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குபேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.