சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து புது பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் பகவதி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஹரிப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிப்பிரியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அடுத்து காதல் ஜோடிகள் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்வதற்காக தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திருமணத்தைப் பதிவு செய்வதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்த பிறகு பத்திரப்பதிவாளர் மோகன்குமார் என்பவர் இருவரையும் அழைத்துள்ளனர். அந்த சமயம் பெண் வீட்டார் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து ஹரிப்பிரியாவை கடத்தி சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் தடுக்க வந்த பகவதி குமார் மீது மிளகாய் பொடி தூவியதோடு, அவரை அரிவாளால் வெட்டியதால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பகவதி குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.