ஓடும் போதே மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை நோக்கி மாநகர பேருந்து ஒன்று திருவான்மியூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை சிவானந்தம் என்ற ஓட்டுனர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதில் கண்டக்டராக சங்கரன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக பயணிகளை கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து பயணிகள் அவசர அவசரமாக பேருந்திலிருந்து கீழே இறங்கிய உடன் பேருந்தின் பின் பகுதி மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாநகர பேருந்தில் எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் பேருந்தில் இருந்து கரும்புகை வெளியான உடனே பயணிகள் இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.