தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதனைத்தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் செயலாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி முக ஸ்டாலின் முதன்மை செயலாளராக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அணு ஜார்ஜ், நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வராக புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்டாலினுக்கு பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள். தமிழகமும் கேரளமும் பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்கும் நல்லுறவு தொடரவும், ஒன்றிணைந்து செயல்பட்டு இந்திய வளர்ச்சிக்கு உதவவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.