இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் ஆலோசகராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராவார். ஐபிஎல்லில் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெற்று கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
இந்நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது கதவு பூட்டி கிடந்தது. அதன்பிறகு உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அவர் வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிதி நெருக்கடியால் வி.பி சந்திரசேகர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவரது இறப்புக்கு முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.