கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் காய்கறி, மளிகை, கறி, ஜவுளி, போன்ற கடைகள் பகல் 12 மணிக்கு மேல் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி நகர சபை ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிசாமி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாமல் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடியிருந்தனர். இதனைபார்த்த அதிகாரிகள் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறி விட்டு அந்த கடையின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு அந்த கடையை பூட்டி விட்டனர். மேலும் சில கடைகளின் உரிமையாளர்கள் முக கவசம் அணியாமலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமலும் இருந்ததற்காக அவர்களிடம் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 200 அபராதம் விதித்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த ஒரு வங்கியில் முகக் கவசம் அணியாமலும், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமலும் கூட்டமாக வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதனால் வங்கிக்கு ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் இது போன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.