இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி வழங்கியுள்ளனர். மேலும் ஏழு கோடி நிதி திரட்டும் திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதற்காக #In This together என்ற ஹேஸ்டேக் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.