சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மரக்கட்டைகளை டிராக்டரில் கடத்த முயன்ற போது காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூர் உடையாகுளம் கண்மாயில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அங்கு உள்ள மரங்களை சிலர் வெட்டி கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னா மற்றும் உதவியாளர் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் கடத்தலை தடுத்தனர். இருப்பினும் மரங்கள் வெட்டுவதில் அவர்கள் தீவிரமாக இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு டிராக்டரில் வெட்டப்பட்ட மரங்களை சிலர் ஏற்றி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் மரக்கட்டைகளை டிராக்டருடன் கடத்த முயன்ற போது காவல்துறையினர் அங்கு வந்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து களத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிந்த திருவேகம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.