மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் வீட்டின் வெளியில் குண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவினுடைய முன்னாள் அதிபர் மற்றும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மொஹமத் நஷீத்தின் குடியிருப்பிற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளது. இதனால் நஷீத் தன் வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சம்பவத்தில் தற்போது வரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நஷீத்தின் நெருங்கிய நண்பரான தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார்.