தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான் கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக இருக்கின்றது. இந்த சாலையின் குறுக்கே ஒரு அடிக்கு மேலான பள்ளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த சாலை வழியாக ஏராளமான இருசக்கர வாகனங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரிலிருந்து இரவு நேரத்தில் வரும் போது இந்த பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது. மேலும் இந்த பள்ளம் சரி செய்யாமல் இருந்தால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு உயிர் சேதம் நேரிடும் என்ற பயம் இருக்கின்றது என்று அந்த சாலையில் செல்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்த விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே இந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.