100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கத்தார் நாட்டு தலைநகர் தேர்காவில் இருந்து கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமிஷனரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த 113 பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் தன்சானியா நாட்டை சேர்ந்த பிலீக்ஸ் ஒபடியா என்ற பெண்ணையும், டிபோரா இளையா என்பவரையும் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக தாங்கள் இந்தியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களுடைய சூட்கேஸ்களை சோதனை செய்தபோது அதில் இருந்த ரகசிய அறைக்குள் போதை பொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அதிகாரிகள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 15.6 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.