தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பையும் நேற்று காலை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சித்த மருத்துவம் மூலமும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வந்தது.
இதன்காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம், சுக்கு கஞ்சி உள்ளிட்ட பல்வேறு மூலிகை கொண்டு தயாரிக்கப் படுபவை நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.