தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை அமைத்து இருக்கின்றோம். கழகத்தின் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் அனைத்து மக்களின் அரசாக இருக்கும், அப்படிதான் செயல்படும். தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கோட்டைக்கு வந்து நான் ஐந்து முக்கிய அரசாணைகள் பிறப்பித்தேன். தேர்தல் நேரத்தில் என்னால் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டவை தான் அவை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட கூடிய கட்டுப்பாடுகள் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற மக்களின் துயரத்தை போக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கு தலா 4,000 ரூபாய் தரப்படும்.
அதில் முதல்கட்டமாக 2,000 ரூபாய் இந்த மே மாதத்தில் வழங்கப்படும் என்பதற்கான எனது முதல் கையெழுத்து இட்டேன். ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் இரண்டாவது கையெழுத்தாக இட்டேன். அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான உத்தரவுகளில் மூன்றாவது கையெழுத்து இட்டேன். தேர்தல் பரப்புரையின் போது தொகுதிகள் தோறும் நான் பெற்ற மனுக்கள் மேல் நடவடிக்கை எடுக்க, உங்கள் தொகுதியின் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் புதிய துறையை உருவாக்குவதற்கான உத்தரவுகளில் நான்காவது கையெழுத்து இட்டேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இன்னலை குறைக்கும் வகையில், அதற்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கும் என்பதற்கான ஐந்தாவது கையெழுத்தை போட்டு இருக்கிறேன் என முக. ஸ்டாலின் தெரிவித்தார்.