தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறுகையில், இது கொரோனா என்ற பெரும் தொற்று காலமாக இருப்பதனால் அதனைக் கட்டுப்படுத்தினோம், முழுமையாக ஒழித்தோம், கொரோனா தொற்றே இனி இல்லை என்கின்ற சூழல் தமிழகத்தில் உருவாக்கவே தமிழக அரசு முழு முயற்சிகளில் இறங்கி இருக்கின்றது. கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாமல் தடுப்பது, கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முழுமையாக மீட்பது, ஆகிய இரண்டு குறிக்கோள்களை தமிழக அரசு முன்னெடுத்து செயல்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
முதல் அலையை விட மோசமாக இந்த கிருமி உருமாறி இருக்கிறது. இப்பொழுது இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் நுரையீரலை அதிகமாக பாதிக்கின்றது. வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருப்பவர்களின் மரணம் அதிகமாக இருந்த நிலைமை மாறி, வேறு நோய் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர் சொல்கிறார்கள் என ஸ்டாலின் கூறினார்.