16 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இந்த விஜயகுமார் அப்பகுதியில் இருக்கும் இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிகளை விற்பனை செய்வதற்காக விஜயகுமார் ஊட்டிக்கு சென்றபோது அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
இதற்கிடையில் விஜயகுமார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து தனது வீட்டில் வைத்திருப்பதாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த சிறுமி தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உடனடியாக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.