டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் காணாமல் போனது.
இதை அவர் வீடு முழுக்க தேடியும் கிடைக்காததால் நகையை எங்காவது மறந்து வைத்திருக்கலாம் என நினைத்து அமைதியாக இருந்துள்ளார். இதனையடுத்து வனிதாவின் தாயான ராஜேஸ்வரியும் தனது மோதிரம் காணாமல் போனதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த இக்பால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இக்பால் வீட்டில் பணிபுரியும் ஜெயமேரி என்ற பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதில் ஜெயமேரி நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.