திண்டுக்கல்லில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் மூக்குப்பொடி சித்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் நீண்ட சடைமுடி , மெலிந்த தேகம், பழைய ஆடை ஆகியவற்றுடன் திண்டுக்கல்லில் சுற்றி திரிந்துள்ளார். அவர் அங்கு யாரிடமும் பேசாமல் கூர்மையான மற்றும் மௌன விழிகளில் தீர்க்கமான பார்வை கொண்டிருந்ததால் அவரை பக்தர்கள் அமானுஷ்ய சக்தி கொண்டவராக கருதுகின்றனர். மேலும் அவரிடம் அடி வாங்கினால் பக்தர்களின் துன்பம் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிச்சை சாமிகளை அவருடைய குடும்பத்தினர் திண்டுக்கல்லுக்கு வந்து அங்கிருந்து நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். இதனை அறிந்த பிச்சை சாமிகளின் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து பிச்சை சாமிகள் பக்தர்கள் அவருடைய உடலை திண்டுக்கல்லில் அடக்கம் செய்ய முடிவு செய்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்து பிச்சை சாமிகள் உடலை திண்டுக்கல்லுக்கு கொண்டு வருகின்றனர்.