காபூலில் பள்ளிக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கார் வெடிகுண்டு, மோட்டார் வெடிகுண்டு என்று தொடர்ந்து வெடித்திருக்கிறது. இந்நிலையில் Sayed ul Shuhada என்ற பள்ளியின் அருகில் மாணவர்கள் வெளியேறும் சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிகமான மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் அந்த இடம் முழுவதும் ரத்தமாக கிடந்துள்ளது. இதில் சுமார் 150 க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்த தாக்குதலில் எந்த அமைப்பினரும் பொறுப்பேற்காத நிலையில் ஆப்கான் அதிபரான அஷ்ரப் கனி, தாலிபான் அமைப்பினர் தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் தலிபான்களின் செய்தி தொடர்பாளரான, ஜபிஹுல்லா முஜாஹித் இது போன்ற மக்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தான் நடத்துவார்கள் என்று கூறியிருக்கிறார்.