தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளிவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சபரிஷ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஆன்லைன் விற்பனை கம்பெனியில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரேம்குமார் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக திடீரென மயங்கி விழுந்து விட்டார் எனக் கூறி சபரிஷ் கடந்த 5-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் தனது தந்தையை அனுமதித்துள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து தனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து தரவேண்டும் என பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் சபரிஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு டாக்டர்கள் அவரது தலையில் அடிபட்டு இருப்பதாகவும், பிரேம்குமார் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் சபரிஷை பிடித்து பள்ளிகரணை காவல்துறையினர் விசாரித்தபோது தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சபரிஷ் தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார். அதன் பின் தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்ற நோக்கத்தில் சபரிஷ் உடனடியாக அவரை உணவு ஒவ்வாமை காரணமாக மயங்கி விழுந்தார் என கூறி மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் சபரிசை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.