திடீரென மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் மயில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக தனது கடையை பூட்டி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். பின்னர் சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு விரைவாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் கடையில் இருந்த மரக்கட்டைகள், ஜன்னல்கள், கதவுகள் போன்றவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளரான மயில்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.