செய்த உதவியை நினைவு கூறும் வகையில் ஒரு காலனிக்கு பொதுமக்கள் கலெக்டரின் பெயரை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விராலிகாடு பகுதியில் இருக்கும் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டுவரை பட்டா கிடைக்கவில்லை. இதற்காக அங்கு வசிக்கும் பொதுமக்கள் 30 ஆண்டுகளாக தங்களுக்கு இலவச பட்டா தருமாறு பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டராக கடந்த 2011-ம் ஆண்டில் இருந்த உமாநாத் என்பவரிடம் இலவச பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். இதனையடுத்து கலெக்டர் 2 ஏக்கர் நிலத்தில் வசித்து வரும் சுமார் 80 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையால் தங்களது 30 ஆண்டுகால கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அந்த காலனிக்கு ” திரு. உமாநாத் காலனி” என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனால் அந்தக் காலனியின் பெயர் அரசு ஆவணங்களில் கூட உமாநாத் காலனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பணி மாறுதல் காரணமாக கலெக்டர் உமாநாத் வேறு பகுதிக்கு சென்றாலும் அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அவரது உதவியை நினைவு கூறும் வகையில் கலெக்டர் உமாநாத் காலனி என்ற பெயரை மாற்றாமல் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.